சபாநாயகர் தேர்தல் தேதி அறிவிப்பு; தக்கவைக்க முயலும் பாஜக

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.

இந்நிலையில் ஜூன் 26 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தங்கள் தரப்பிற்கு சபாநாயகர் பதவி வேண்டும் என நிபந்தனை விதித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேநேரம் சபாநாயகர் பதவியை தாங்களே தக்க வைத்துக் கொள்ள பாஜக மும்முரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை கேபினட் அந்தஸ்து பதவிகள் வழங்குவது, எத்தனை இணைய அமைச்சர் பதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டபோதே சபாநாயகர் தேர்வு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதன்படி பாஜகவை சேர்ந்த ஒருவரையே சபாநாயகராக நியமிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக ஆந்திர மாநில பாஜக தலைவரான புரந்தேஸ்வரியை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என பாஜகவின் ஒரு சாரார் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. புரந்தேஸ்வரி ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரி என்பது குறிப்பிடத்தகுந்தது.