யாழ்ப்பாணத்தில் ‘சீன கடலட்டைகள்’: ஜெனிவாவில் சிறீதரன் கூறிய கருத்து

சீனா மூலம் வடக்கு கடற்பரப்பில் கடலட்டை திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பொருளாதார ரீதியில் நன்மையாக இருந்தாலும் குறித்த வேலைத்திட்டங்கள் மூலம் வடக்கின் மீன்பிடித் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜெனிவாவில் தெரிவித்தார்.

ஜெனிவா நகரில் இடம்பெற்று வரும் தேசிய பொருளாதார மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். சீனாவில் நவீன தொழிநுட்பம் வடக்கின் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புபட்டிருந்தாலும் எந்தவித தொழிநுட்ப வளர்ச்சியும் காணாத இலங்கையின் வடக்கு, கிழக்கு மீனவ மக்கள் இந்த வளர்ச்சியுடன் கூடிய தொழிநுட்பத்தின் முன்னால் போட்டியிடுவது பாரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

விசேடமாக, பருத்தித்துறை மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களில் நடத்தப்படும் சிறிய மீன் பண்ணைகள் தற்போது மூடவேண்டிய அபாயத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், வடக்கு, கிழக்கில் காணப்படக்கூடிய கடற்பரப்பில் சிறிய மீன்கள் உருவாகக்கூடிய இடங்கள் விரைவில் அழிவடைந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துவரும் நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் மீனவ மக்கள் உட்பட தென்னிந்திய மீனவ மக்களுடன் இணைந்து இந்த கடற்பரப்பை பாதுகாக்கும் மாநாட்டை நடத்துவது அவசியம் எனவும் அறிவுறுத்தினார்.