பொது மேடையில் தமிழிசையை கண்டித்த அமித்ஷா : தமிழக பாஜகவிற்குள் உட்கட்சி பூசல் காரணமா?
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை பொது மேடையில் அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை – தமிழிசை தரப்பு இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமித்ஷா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவை கடந்துச் சென்ற தமிழிசையை அழைத்து கண்டித்துப் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், தமிழிசை சவுந்தரராஜனும் இதன்போது அமித்ஷாவிடம் விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற்றிருக்கவில்லை.எனினும் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் வாக்கு வங்கியில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.இந்தத் தோல்விக்கு தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக சில கருத்துகளை முன்வைத்திருந்ததுடன் முன்னாள் தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.
இதனையடுத்து அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் தமிழிசை ஆதரவாளர்களுக்கும் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி பாஜக மேலிடம் தமிழக தலைவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையிலேயே, தமிழிசை சவுந்தரராஜனை பொது மேடையில் அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.