பிரான்ஸின் தேசியவாதிகள் அமோக வெற்றி! அதிர்கின்றது ஐரோப்பா!!
32 சத வீத வாக்குடன் வென்றார் பார்டெல்லா!!மக்ரோனிஸம் முடிந்தது வலதுசாரிகள் கோஷம்!!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரெசெல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் கண்டம் எங்கும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் – பிரான்ஸின் தேசியவாதிகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அமோக வாக்குகள் பெற்றுப் பெரும் வரலாற்று வெற்றியை நிலைநாட்டியிருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்த படியாக சோசலிஸக் கட்சிகள் அதிக வாக்குகளைக் கைப்பற்றியிருக்கின்றன.
தேசியவாதிகள் பெற்ற வாக்குகளில் அரைவாசியை மட்டுமே வெல்ல முடிந்த நிலையில் அதிபர் மக்ரோனின் அணி பலத்த சரிவைச் சந்தித்திருக்கிறது. மக்ரோனின் ஐக்கிய ஐரோப்பியக் கனவு மீது தேர்தல் பெறுபேறுகள் பலத்த அடியாக விழுந்திருக்கின்றது.
மரின் லூ பென் அம்மையாரது தேசியவாதக் கட்சிக்குத் தலைமை வகித்த தலைமை வேட்பாளராகிய இளம் அரசியல்வாதி ஜோர்டான் பார்டெல்லா (Jordan Bardella)32 வீத வாக்குகளைப் பெற்று அரசியல் அரங்கை அதிரவைத்துள்ளார்.
மக்ரோனின் ஆளும் கட்சியை உள்ளடக்கிய கூட்டணிக்குத் தலைமை வகித்த வலேரி ஹயர் (Valérie Hayer) 15.40 சதவீத வாக்குகளையே வெல்ல முடிந்திருக்கிறது.
பிரான்ஸின் சோசலிஸக் கட்சியை உள்ளடக்கிய அணியின் தலைமை வேட்பாளர் ரஃபேல் க்ளக்ஸ்மேன் (Raphaël Glucksmann) 13.09 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது நிலையில் உள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மக்ரோனிஸத்தின் முடிவு என்று வர்ணித்திருக்கின்ற வலதுசாரி எதிர்க்கட்சிகள் புதிய சகாப்தம் ஒன்றை நோக்கிப் பயணத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளன.
ஜேர்மனி உட்பட முக்கிய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் தேர்தல் பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.