தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இல்லை-ரிசி சுனக்
பிரித்தானிய பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இல்லையென பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுகக் தெரிவித்துள்ளார். பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம் கலந்துகொண்டமைக்கு மன்னிப்புக் கோரியமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதன்பின்னரான கருத்துக் கணிப்புகளின் பின்னர் கன்சர்வேட்டிவ் பெரும் தோல்வியை சந்திக்கும் எனவும் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றின் போது ரிஷி சுனக்கிடம் பதவி விலகுவது பற்றி யோசித்தீர்களாக என கேள்வியெழுப்பட்ட நிலையில் அவ்வாறான எதுவித தீர்மானமும் இல்லையென அவர் பதிலளித்துள்ளார்.
நான் முன்னோக்கிச் செல்வதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை.மக்களின் வாக்குகளுக்காக நான் போராடுவதை நிறுத்தப் போவதில்லை. நம் நாட்டின் எதிர்காலத்திற்காக போராடுவதையும் நான் நிறுத்தப் போவதில்லை என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே நாளில் பிரதமர் ரிஷியின் செயற்பாடுகள் கன்சர்வேடிவ் கட்சியில் திகைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. ஆனால், எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், டி-டே தரையிறங்கியதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வுகளின் போது நார்மண்டியில் தங்கியிருந்ததாகவும் உக்ரெய்ன் ஜனாதிபதி வோல்டிமார் செலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் தொழிற்கட்சித் தலைவர் மற்றும் சுனக் இடையே இடம்பெற்ற நேர்காணலின் போது பிரதமர் ரிஷி சுனக்கால் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களும் பொய் என கூறப்பட்டதுடன் இந்த புள்ளிவிபரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கன்சர்வேடிவ்வின் கூற்றுகளை ஆய்வு செய்த பிபிசி மக்களை தவறாக வழிநடத்தும் அபாயம் காணப்படுவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.பிரித்தானியாவில் அடுத்த மாதம் 04 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கன்சர்வேடிவ் பெரும் தோல்வியை எதிர்நோக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.