டென்மார்க் பிரதமரை வீதியில் வைத்துத் தாக்கிய நபர் கைது!

கொப்பனேஹனில் பரபரப்புச் சம்பவம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
டென்மார்க் நாட்டின் பிரதமர் மெற்ற ஃபிரெடெரிக்ஸன் தலைநகர வீதி ஒன்றில் வைத்து உடல் ரீதியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.
கொப்பனேஹனின் மையத்தில் Kultorvet என்ற வீதியில் வைத்துப் பிரதமரை நெருங்கிய ஆண் ஒருவரே அவரைத் தாக்கியிருக்கிறார். 46 வயதான பிரதமர் ஃபிரெடெரிக்ஸன் அம்மையார் அதனால் பெரும் “அதிர்ச்சி” அடைந்துள்ளார் என்பதைப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. மேலதிக விவரங்களை அது வெளியிடவில்லை.
பிரதமரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ள பொலீஸார், மேலதிக விவரங்கள் எதனையும் உடனடியாக வெளியிடவில்லை.

படம் :தாக்குதல் நடத்தப்பட்ட Kultorvet வீதிப் பகுதி.

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் வாக்களிப்புக்கு இரண்டு தினங்கள் முன்பதாக இன்று வெள்ளிக்கிழமை மாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. பிரதமர் அவரது சமூக ஜனநாயகக் கட்சியின்(Social Democrats) வேட்பாளர்களுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரங்களில் இன்றைய தினம் ஈடுபட்டிருந்தார் என்று டெனிஷ் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.
ஒரு நாட்டின் பிரதமர் வீதியில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்துக்குச் சர்வதேச செய்தி ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. அதேசமயம் உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவிக்கும் பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.
தாக்குதலாளி கைகளால் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தாக்குதலால் பிரதமருக்கு உடல் ரீதியான பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. தாக்குதலால் பிரதமர் நிலைகுலைந்து போனார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியிருக்கின்றனர். “அழகும் பாதுகாப்பும் நிறைந்த டென்மார்க் தேசத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவே கூடாது ” – என்று கொப்பனேஹன் வாசி ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் Kultorvet கடைத் தெருவுக்கு எதற்காகச் சென்றார்? பிரதமரது உடலின் எந்தப் பகுதி தாக்கப்பட்டது?
ஆண் ஒருவர் அவரை நெருங்கித் தாக்கியதை மெய்க்காவலர்களால் தடுக்க முடியாமற் போனது எப்படி? தாக்குதல் நடத்தியவரது நோக்கம் என்ன?
-இவை போன்ற கேள்விகளுக்கு விளக்கமான விடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.