உக்ரைனுக்கு “மிராஜ் – 2000” போர் விமானங்கள்! மக்ரோன் அறிவிப்பு
ரஷ்யாவில் உளவு பார்த்த பிரெஞ்சுப் பிரஜை கைது
உக்ரைன் அதன் மண்ணையும் வான்பரப்பையும் தற்காத்துக் கொள்வதற்காக பிரான்ஸின் “மிராஜ் 2000” (Mirage 2000–5) ரகப் போர் விமானங்களை வழங்கவுள்ளதாக அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.
பிரான்ஸின் முக்கிய தொலைக்காட்சி நிலையங்களுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் உக்ரைன் போர் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இத்தகவலை வெளியிட்டார். அதேசமயம் சுமார் 4ஆயிரத்து 500 உக்ரைன் படை வீரர்களுக்குப் பிரான்ஸ் மண்ணில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பாரிஸ் எத்தனை மிராஜ் போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கும், எப்போது வழங்கும் என்பன தொடர்பான விவரங்களை மக்ரோன் வெளியிடவில்லை. பிரான்ஸ் நாட்டின் டாசோல்ட் (Dassault Aviation) கம்பனியினால் வடிவமைக்கப்பட்ட மிராஜ் ரக சண்டை விமானங்கள் பிரான்ஸின் விமானப்படையினதும் உலகின் பல நாடுகளினதும் முதன்மைப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
படம் :நோர்மன்டியில் ஷெலென்ஸ்கியும் அவர் துணைவியாரும் மக்ரோன் தம்பதிகளுடன்..
இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியின் நாஸிப் படைகளுக்கு எதிராக நேச நாடுகளது படை வீரர்கள் நோர்மன்டிக் கடற்கரையில் நடத்திய பெரும் தரையிறக்கத் தாக்குதலின் எண்பதாவது ஆண்டு நிறைவு நாள் நேற்றாகும். அதனை ஒட்டி நோர்மன்டி கடற்கரையில் உலகத் தலைவர்கள் பலர் ஒன்று கூடி நடத்திய வெற்றி விழாவின் முடிவில் மக்ரோன் இந்தத் தொலைக்காட்சி நேர்காணலை அங்கிருந்தவாறு வழங்கியிருந்தார்.
நோர்மன்டி விழாவில் அதிபர் பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஜேர்மனிய சான்சிலர் ஒலாப் சோல்ஸ் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் போன்றோருடன் உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கியும் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் வந்து கலந்துகொண்டார்.
படம் :நோர்மன்டி விழாவுக்கு வருகை தந்த பைடன் தம்பதியினர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல், காஸா போர் நிலைவரம், உக்ரைன் நிலைமை உட்படப் பல்வேறு விடயங்கள் பற்றி நேற்றைய நேர்காணலில் மக்ரோன் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
பிரெஞ்சுப் பயிற்றுவிப்பாளர்கள் நேரடியாக உக்ரைன் மண்ணில் சென்று அந்நாட்டுப் படையினருக்குப் பயிற்சி அளிப்பார்களா என்றும் மக்ரோனிடம் கேட்கப்பட்டது.
“உக்ரைன் அதிபரும் பாதுகாப்பு அமைச்சரும் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். இது விடயத்தில் எங்கள் நேச நாடுகளுடன் கலந்து பேசி ஒரு கூட்டான தீர்மானத்தின் அடிப்படையிலேயே செயற்படுவோம்.
பாரிஸின் இந்த முயற்சி போரை விரிவுபடுத்தும் என்று நான் நம்பவில்லை… “-இவ்வாறு மக்ரோன் அதற்குப் பதிலளித்தார்.
இதேவேளை, இராணுவத் தகவல்களைத் திரட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் மொஸ்கோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மொஸ்கோவில் பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்ட தகவலை நேற்றைய தொலைக்காட்சி நேர்காணலின் போது மக்ரோன் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால் கைதானவர் சுவிஸ் நாட்டின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருபவர் என்றும் அவர் இராணுவ உளவாளி அல்லர் என்றும் பாரிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.