இணையத்தில் வைராலகி வரும் பிரதமர் மோடி அரசை விமர்சித்த  சந்திரபாபு நாயுடுவின் டிவீட்


பிரதமர் மோடி அரசை கடந்த 2019இல் சந்திரபாபு நாயுடு விமர்சித்த டிவீட் பதிவு தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது. மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி இந்திய அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றியுள்ளது.

யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ  கூட்டணியில் அங்கம் வகித்து இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியயோர் பாஜக ஆட்சியமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் இருவருமே முன்னர் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்த தலைவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், வருங்கால ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த 2019ஆம் ஆண்டு அவரது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்த டிவீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், இந்தியாவின் மதிப்புமிக்க அமைப்புகளை மோடி திட்டமிட்டு அழித்துவிட்டார்.

பாஜக ஆட்சியில் மாநில சுயாட்சி மற்றும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்புகளை கூட பாஜக விட்டுவைக்கவில்லை. என பதிவிட்டு இருந்தார். இதனை டிவிட்டரில் மறுபதிவு செய்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.