பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வேட்பாளர்!
-கிறிஷ்னி ரேஷேகரோனுக்கு ஆதரவாக திரண்ட பெருந்தொகையான தமிழர்கள் -
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுதேர்தலில் முதல் தடவையாக கிரிஷ்னி ரேஷேகரோன் (Chrishni Reshekaron) என்ற ஈழத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ்ப்பெண் போட்டியிடவுள்ளார்.
பிரித்தானிய தொழில்கட்சி சார்பாக, சட்டன் மற்றும் சீயாம் (Sutton and Cheam) பகுதியில் போட்டியிடவுள்ள கிரிஷ்னி ரேஷேகரோனிற்கு தமது முழுமையான ஆதரவை வழங்க பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து முன்வந்துள்ளனர்.
கிரிஷ்னி ரேஷேகரோனிற்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை திரு சென் கந்தையா தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) என்ற அமைப்பு, கடந்த ஞாயிறு (02 ஜூன் 2024) அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தது. இதன்போது ஈழத்தை பூர்வீகமாக கொண்ட வைத்தியர்கள், சட்டத்தணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்ட தமிழ் மக்கள் பெருமளவில் தமிழர்கள் திரண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கும், இனப்படுகொலைக்கு நீதி கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பிரேரிக்கவும், போர்குற்றவாளிகளை பிரித்தானியா தடைசெய்யவும் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் கிரிஷ்னி ரேஷேகரோனிடம் தமிழர்களால் கோரிக்கை விடப்பட்டது.
தொழிலாளர் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் அர்ப்பணிப்பானது சட்டன் மற்றும் சீயாம் பிரதேசங்களில் ஒற்றுமை மற்றும் வலிமையை எடுத்துக்காட்டுகிறது என்று கிறிஷ்னி ரேஷேகரன் தனது நன்றியுரையில் கூறினார். அரசியல் பங்கேற்பு மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நன்கு அறியப்பட்ட தொழிலாளர்களுக்காக தமிழர்கள் என்ற அமைப்பு, ரேஷேகரனின் கொள்கைகள் தங்கள் கொள்கைகளுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதை திரு சென் கந்தையா தனது பேச்சில் எடுத்துரைத்தார். பிரித்தானிய பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர்களை உற்சாகப்படுத்துவதிலும், நாடாளுமன்றத்தில் மாறுபட்ட பிரதிநிதித்துவத்திற்கு உத்தரவாதம் அளிப்பதிலும் இந்தக் கூட்டாண்மை இன்றியமையாததாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பிரச்சார ஆரம்பிப்பு நிகழ்வை தன்னார்வ தொண்டர்கள் முன்னின்று நடந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அரசியல் செயற்பாட்டாளராகிய விஸ்வா ரமேஸ் அவர்களின் தலைமையில், திருச்செல்வம் சிவகாந், செல்வராஜ் இலங்கநாதன், கோபிநாத் கந்தசாமி, தனுசன் ராசேந்திரம், ஏஞ்சலோ நிருஷன் கதிராமர், துரைராஜா நீதிராஜா, கனகசபாபதி கார்த்திகேசன் ஆகியோர் உள்ளிட்ட இளையோர் அணி முக்கிய பங்காற்றி இருந்தனர். அறிமுக பேச்சுக்களின் பின்னர் வீடு வீடாக சென்று கிரிஷ்னி ரேஷேகரனுக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்து, 1000க்கு மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். அவர்களது அர்ப்பணிப்பான இந்த பிரச்சார பணி அப்பகுதியில் உள்ள மக்களின் மனதைக் கவர்ந்தது.