பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தழிழ்ப்  பெண்கள்

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. இம்முறை தொழிற் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர். பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தல் உலகெங்கிலும் கவனிக்கத்தக்க ஒன்றாக விளங்குகிறது .

14 வருடங்களாக பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியான கன்சர்வேற்றீவ் கட்சியின் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சி செய்து வந்தது. இந்த 14 வருட ஆட்சியில் நான்கு பிரதமர்களையும் அக் கட்சி சந்தித்திருந்தது. அதாவது பிரித்தானிய மக்கள் ஒரே கட்சிக்குள் நான்கு பிரதமர்களைக் கண்டுள்ளனர்.ஆனாலும் கன்சர்வேற்றீவ் கட்சியின் செயற்பாடுகளினால் பல தொய்வுகள் ஏற்பட்டு பல கஷ்டங்களை பிரித்தானிய மக்கள் எதிர்நோக்கினர்.

இப் பின்னணியில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரித்தானியப் பொதுத்தேர்தலைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் தொழிற்கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. பிரித்தானியாவில்  தொழிற் கட்சியில் இரண்டு தமிழ் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். சட்டன் தொகுதியில் கிருஷ்ணி ரிஷிகரன், கிழக்கு லண்டன் ஸ்டர்ட்ஃபோர்ட்டில் உமா கிருஷ்ணன் ஆகியோரே போட்டியிடுகின்றனர்.

இதனால் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் இம்முறை வாக்களிப்பில் அதிக அக்கறை காட்டுவார்கள் என்று நம்பப்படுகின்றது.  இலங்கைத்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த இரு தமிழ்ப் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகி, பின்னர் அமைச்சராகும் வாய்ப்புக்களும் அதிகமாகத் தெரிகிறது.எனவே இந்த முறை பிரித்தானியாவின் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு சாதனையைச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.