தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல: சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்க கோருவதும் ஒன்றல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது கொள்கை ரீதியாகப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நிலையை ஏற்கனவே எடுத்திருந்தாலும் இந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற கட்சிகள் இந்த விடயத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது தனது அரசியல் பீடக் கூட்டத்தை கூட்டி இந்தப் பொதுவேட்பாளர் என்ற விடத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், எங்களுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய தமிழ் சிவில் அமைப்புகள், கட்சிகள் அனைத்தையும் இணைத்து இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்த வேளையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது ஐனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்புச் செய்யவேண்டும் என்றுதெரிவிப்பதோடு, இன்னும் சில பேர் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரும் ஒன்றுதான் என்ற விதமான கருத்துக்களையும் சொல்லி வருகின்றார்கள். உண்மையில் பகிஷ்கரிப்பும் பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல. இலங்கையில் இருப்பது வெறுமனே ஒரு பொருளாதாரப்பிரச்சினை மாத்திரம்தான், அந்தப் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று அரசு இலங்கையிலும் வெளி உலகத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

எனவே,புரையோடிப் போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படமாட்டாது என்பதை உலகறியச் செய்யவும், சிங்கள மக்களுக்குப் புரிய வைக்கவும் வேண்டும். பொது வேட்பாளர் என்ற விடயத்தை நாங்கள் முன்னெடுக்கக்கூடிய நிலையில் ஆதரவு கோரி இன்னும் சில தினங்களில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணம் வருகின்றார்கள். அதேபோல் மற்றவர்களும் இங்கு வரவிருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமது  உரிமைகளைப் பெற்றுக்கொள்ள இந்தக் கால நேரத்தை நாங்கள் சரியான முறையில் கையாள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.