இலங்கையில் ஸ்ரீராமாயணச் சுவடுகள்’ திட்டம்: இந்தியாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான ஒரு கலாசார நடவடிக்கை- விமல் வீரவன்ச
புராணக்கதையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இலங்கையின் 9 வரலாற்று இடங்களை மேம்படுத்தும் திட்டமான ‘ஸ்ரீராமாயணச் சுவடுகள் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார தொடர்பை மேம்படுத்தி, நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், அதிநவீன தொழில்நுட்ப மற்றும் சுற்றுலா முறையை பின்பற்றும் ‘ஸ்ரீராமாயணச் சுவடுகள்’ திட்டம், அங்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியாவின் அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமர் ஆலயத்தின் பிரதம பொருளாளர் கோவிந்த் தேவகிரி மகாராஜ் சுவாமிகள் மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்னாயக்க ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதன் மூலம் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இது 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு என்று கூறப்படுகிறது. ஸ்ரீ ராமாயண சுவடுகள் என்று அழைக்கப்படும் இந்த திட்டம், இலங்கையில் ராமர்-சீதையின் கதையுடன் தொடர்புடையதாக அங்கீகரிக்கப்பட்ட 9 இடங்களை மேம்படுத்தும் திட்டம் ஆகும்.
மன்னார் படுகையில் இருப்பதாக கூறப்படுகிற ஆதாமின் பாலம், சீதா தேவியை ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட இடம் என்று கூறப்படும் சீதா எலிய, சீதா தேவியின் அக்னி சோதனை எனும் வெலிமடை, திவுரும்பொல, இராமர் முதலில் இலங்கையில் இறங்கிய இடம் எனக்கூறப்படும் உஸ்ஸங்கொட தேசிய பூங்கா சன்ஜீவனி மூலிகை காணப்பட்டதாக கூறப்படுகின்ற காலி – ரூமஸ்ஸல திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் சிலாபம்- மாணவரி கோயில் சீதையை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் இடம் எல்ல – ராவணன் குகை கதிர்காமம் அல்லது தெற்கு கைலாசம் என்பவ இத்திடடத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.
இது ‘இலங்கையில் இந்தியாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான ஒரு கலாசார நடவடிக்கை’ என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், ‘இந்த திட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.’ என சீதாஎலிய சீதா அம்மன் ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.