நிதி உள்ளிட்ட சொத்துகள் இலங்கையில் முடக்கப்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் : வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
ஈழத் தமிழர்கள் சிலரின் அமைப்புகள் உட்பட பதினைந்து தீவிரவாத அமைப்புகள் என கூறப்படுகின்ற மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 210 நபர்களின் அனைத்து நிதி, ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கி இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விடுதலைப் புலிகள் அமைப்பு , தமிழர் புனர்வாழ்வு அமைப்பு- TRO, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்பவை முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் , ஜமாதே மிலாதே இப்ராஹீம் , விலயாத் அஸ் செய்லானி, கனேடியன் தமிழ் தேசிய பேரவை,தமிழ் இளைஞர் அமைப்பு, டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்,Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே, தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ராமன் சின்னப்பா அல்லது சின்னப்பா மாஸ்டர், கருணா குலரத்னம் அல்லது நல்லதம்பி, துரைசாமி செல்வகுமார் அல்லது ராஜூ, விடுதலைப் புலி உறுப்பினர் வேலுபிள்ளை ரேவதன், ராமசந்திரன் அபிராம் அல்லது நிரோஸன், சண்முகநுசுசுந்தரம் கந்தாஸ்கரன் அல்லது காந்தசேகரன், கனகராசா ரவிசங்கர் அல்லது சங்கிலி, கிருஷ்ணபிள்ளை சிவஞானம் உள்ளிட்டோருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.