நானுஓயா உடரதல்ல தோட்ட அதிகாரிக்கு எதிராக பகிஷ்கரிப்பு தொடர்பின் பேச்சுவார்த்தை நுவரெலியாவில்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறது இ.தோ.கா

நானுஓயா நிருபர் செ.திவாகரன்

நானுஓயாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் நானுஓயா தோட்டப் பிரிவிற்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் (29) திகதி முதல் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் (16.05.2024) நானுஓயா பிரதான நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குறித்த தோட்ட தொழிலாளர்கள் உடரதல்ல தோட்டத்தில் அதிகாரியால் கையகப்படுத்தும் சூழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ள தேயிலை மரங்களை அழித்து அவ்விடத்தில் கோப்பி கன்றுகளை நடுவதற்கு முன் ஏற்பாடுகள் செய்தமைக்கு எதிராகவும் , இவ்விடயம் தொடர்பில் தோட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த ஆண் தொழிலாளர்களுக்கு எதிரார தோட்ட அதிகாரியால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து தோட்ட தலைவர்கள் மூவருக்கு வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையாலும் தொடர்ந்து தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பணி செல்லாது தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (30) நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் , களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ,தோட்ட தலைவர்கள் உட்பட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது உடரதல்ல தோட்டத்தில் நிர்வாகத்தினர் கூறுகையில் தேயிலையை பிடுங்குவதற்கு பெக்கோ இயந்திரம் வருகை தந்த போது குறித்த தோட்ட தொழிலாளர்களும் தோட்டத் தலைவர்களும் குறித்த இயந்திரத்தை தீ மூட்ட முற்பட்டனர் அத்துடன் தோட்ட தலைவர்களினாலே ஏவல் செய்யப்பட்டு குறித்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாது உள்ளனர் இதனாலையே தலைவர் மூவருக்கும் எங்களால் மன்னிப்பு வழங்கப்பட்டு தொழில் வழங்க முடியாது உள்ளது இன்னும் சில நாட்களில் கலந்து ஆலோசித்து மூவருக்கும் தொழில் வழங்குவது தொடர்பில் அறிவிப்பை வழங்குவோம் என தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

எனினும் குறித்த தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையானது தேயிலை மரங்கள்
இல்லாத இடங்களில் கோப்பி கன்றுகளை நட வேண்டும் எனவும் தேயிலை மரங்கள் பிடுங்க வேண்டாம் அத்துடன் வழக்கம் போல் தோட்ட தலைவர்கள் மூவருக்கும் தொழில் வழங்கினால் நாங்களும் தொழிலுக்கு செல்வோம் என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன் ஒன்றினைந்த தொழிலாளர் பேச்சுவார்த்தை இடம் பெறுவதற்கு முன்னரும் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது .

இவ்விடயம் தொடர்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் இனி வரும் நாட்களில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் தோட்டங்களில் குறிப்பாக உடரதல்ல , கிளாசோ ,எடிம்பரோ,பீட்ரு, ஒலிபன்ட் மற்றும் நுவரெலியா தோட்டம் பகுதிகளில் இருந்து தேயிலை ஏற்றுமதி செய்வதை தடை செய்வதாகவும் அவ்வாறு ஏற்றுமதி செய்தால் இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் இவ்விடத்தில் பொலிஸார் தலையிட கூடாது எனவும் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.