கிழக்கிலிருந்து பொது வேட்பாளர் பெண்ணாக தேர்வு நடைபெற வேண்டும் : யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு
பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம் எனவும் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன்சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், ராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழினவழிப்பிலிருந்து தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு, தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல்ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்டுதல், போரிற்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல், வடக்கு – கிழக்கிற்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல், அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல், பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல் , அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல்.
ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச் சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட விடயங்களெதனையும் சாதித்திராத தமிழ் அரசியற் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. தமிழ் அரசியற்கட்சிகளும், குடிமக்கள் சமூகத்தினரும் தமிழ் மக்களின் பின்நோக்கிய இந்நிலையிலாவது தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ் அரசியலின் பாதையினை மீளச் சரிவர தகவமைத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.