கார்த்திகை மலர் பாதணி விகாரம்:தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என கூறுகிறது அரசு :  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு

கார்த்திகை மலர் மிதிபடும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாகவே உள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்இ அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரபல பாதணி உற்பத்தி நிறுவனமான டி.எஸ். ஐ கம்பெனி அண்மையில் சந்தைப்படுத்தியுள்ள தனது உற்பத்தி ஒன்றில் கார்த்திகை மலரை பதிவிட்டுள்ளது. இது இலங்கையின் பேரினவாத அரசியல் முதலாளித்துவத்தினையும் எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை  காட்டுவதோடு தமிழர்களின் அரசியல் அடையாளங்களில் ஒன்றான கார்த்திகை மலரை மிதிபடும்இ மிதிக்கப்படும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாக உள்ளது.

இதனை வன்மையாக கண்டிப்பதோடு தமிழ் உணர்வு மிக்க தேசப்பற்றார்கள் இதற்கு தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும்.யாழ் தெல்லிப்பளையில் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்றில் இம் மலர் அலங்காரத்துக்கு பாவிக்கப்பட்ட போது அப்பாடசாலையில் அதிபர் உட்பட ஆசிரியர்களை பொலிசார்  விசாரணைக்கு  உட்படுத்தினர். இதே போன்று மேற்படி குறித்த பாதணி கம்பனியின் திட்டமிடல் வடிவமைப்பு சந்தைபடுத்துனர்கள் விற்பனை முகவர்கள் என பலதரப்பினரையும் பொலிசார்  விசாரணைக்கு உட்படுத்துவார்களா? சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா?

என பொலிஸ் மா அதிரை கேட்கிறோம். எமது எதிர்ப்பு பாதணிக்கும், பாதணி கம்பெனிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலுக்கும் அதன் சக்திகளுக்கும் எதிரானதுமாகும். பல இலட்சம் உயிர்கள் எமது அரசியலுக்காக கொல்லப்பட்ட பின்னரும் எமது அரசியலை கைவிடாத  தேசமாக ஒன்று திரண்டு எதிர்ப்பு காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இச் சந்தர்ப்பத்தில் அமைதி காப்போம் எனில் எமது அரசியலுக்கு நாமே எதிரிகளாவோம் எனத் தெரிவித்துள்ளார்.