பொதுவேட்பாளர் தொடர்பில் குழப்பங்களை ஏற்படுத்தும் எம்.ஏ.சுமந்திரன்.

சிவில் சமூக அமைப்புகளின் பொதுவேட்பாளர் தொடர்பான முற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் குழப்பங்களை எற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவேட்பாளர் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகள் ஆரம்பம் முதலே கலந்துரையாடி வருகின்றன. சிவில் சமூக அமைப்புக்குள் விசேடமாக உருவாக்கப்பட்ட சிறப்புக் குழு ஒன்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தும் வருகின்றது. கடந்த வாரம் சுமந்திரனையும் இக்குழு சந்தித்திருந்தது. இந்த நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி சுமந்திரன் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆனால் இக்கூட்டத்திற்குச் சிவில் சமூக அமைப்புகள் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். கலந்துகொள்ளப் போவதில்லை என்று சிவில் சமூக அமைப்பின் பிரநிதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

நேற்று சூம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் சிவில் சமூக அமைப்புகளின் விசேட குழு சுமந்திரனின் கூட்டத்தில் பங்குகொள்வதில்லை என முடிவு செய்துள்ளது.அதேவேளை சிவில் சமூக அமைப்புகளின் பொதுவேட்பாளர் தெரிவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக யாழ் வணிகர் கழகம் அறிவித்துள்ளது. சிவில் சமூக அமைப்பின் விசேட குழுவைச் சந்தித்து உரையாடியபோதே யாழ் வணிகர் கழகம் இவ்வாறு இணக்கம் வெளியிட்டுள்ளது.