சரியான தருணத்தில் பலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயார்!மக்ரோன் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் பலஸ்தீனக் கொடி!!எம்பி இடைநிறுத்தம்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பலஸ்தீனத்தை ஒர் அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸுக்கு எந்தத் தடையும் இல்லை. சரியான ஒரு தருணத்தில் அதனைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கின்ற தீர்மானமாக அது இருக்கக்கூடாது. -அதிபர் மக்ரோன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
ஜேர்மனியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாடு ஒன்றில் காஸா நிலைவரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார். அச்சமயத்திலேயே பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் வெளியிட்டார்.
“இந்த அங்கீகாரம் ஒரு பயனுள்ள நேரத்தில் வர வேண்டும் என்று நான் கருதுகிறேன், இது பிராந்திய அரசுகள் மற்றும் இஸ்ரேல் தொடர்புபட்ட ஒரு செயல்முறையின் ஒரு பகுதியாகும். அத்துடன் பலஸ்தீனிய அதிகார சபையின் சீர்திருத்தத்தின் மூலமான பெறுபேறான ஓர் அடிப்படையே இதனைச் செய்ய அனுமதிக்கிறது. ஒரு பயனுள்ள முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.. ” -இவ்வாறு மக்ரோன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் பலஸ்தீன தனியரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த இன்றைய நாளில் மக்ரோனின் இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது. அதேசமயம் ராஃபாவில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் டசின் கணக்கான சிவிலியன்கள் கொல்லப்பட்ட சம்பவம் உலகெங்கும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. காஸா நிலைவரத்தை விவாதிப்பதற்காக ஐ. நா. பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
ராஃபாவில் நடந்த தாக்குதல் பற்றியும் மக்ரோனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ராஃபாவின் காட்சிகளைக் கண்டு உங்களைப் போலவே நானும் மிகுந்த வருத்தமடைகிறேன். ஆனால் அதற்கான பதில் நடவடிக்கை அரசியல் ரீதியிலானதாக இருக்க வேண்டியது அவசியம் “-என்று அவர் பதிலளித்தார்.
பலஸ்தீனக் கொடி காட்டினார் எம்பி!
இதேவேளை – பலஸ்தீனக் காஸா நிலைவரத்தினால் நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையாகிய தேசிய சட்ட மன்றத்தில் இன்று பெரும் குழப்பம் நிலவியது. தீவிர இடதுசாரி La France Insoumise (LFI)கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவர் விவாதங்களுக்கு நடுவே திடீரென எழுந்து நின்று பலஸ்தீனத் தேசியக் கொடியைக் காட்டினார். அதனால் சபையில் பெரும் சலசலப்பும் குழப்பமும் ஏற்பட்டது.
கொடி காட்டிய எம்பி தேசிய சட்ட மன்றத்தின் உள் விதிகளுக்கு அமைய 15 நாட்கள் சபையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார். அத்துடன் இரண்டு மாதங்களுக்கு அவரது நாடாளுமன்ற ஊதியத் தொகையில் பாதியை இழக்கவுள்ளார்.