தமிழ் பொதுவேட்பாளர் விடயம்: ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் கூட்டம் தீர்மானமின்றி நிறைவு
தனித்தனியாவும், கூட்டணியாகவும் பேசிய பின்னரேயே இறுதித் தீர்மானம் எடுக்க முடியும் என்று ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் தீர்மானமின்றி கூட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
உரும்பிராய் சிவகுமாரன் சிலை அருகில் உள்ள கூட்டுறவு அரங்கில் ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணித் தலைவர்களுக்கும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ்பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, வேந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
சிவில் அமைப்புக்களின் சார்பில் பேராசிரியர் கணேசலிங்கம், ஆய்வாளர்களான யோதிலிங்கம், நிலாந்தன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த உரையாடலின்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுப்பதை மையப்படுத்தியே உரையாடல்கள் ஆரம்பமாகியிருந்தன. குறிப்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்க்கமான முடிவினை அறிவிக்காத நிலையில், அக்கட்சியின் முடிவு கிடைக்கும் வரையில் காத்திருக்காது அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
விசேடமாக, சிவில் சமூகத் தரப்பினரிடத்தில் இருந்து பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்து உறுதியாக முன்வைக்கப்பட்டது. அதேபோன்று, சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பிலும் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தொனிப்பட கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. எனினும் ரெலோ, புளொட், மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய தரப்புக்கள் சில கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பது தான் மிகவும் முக்கியமான விடயம் என்பதை வலியுறுத்தின.
குறிப்பாக, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பங்கேற்பு இல்லாத சூழலில் தமது கட்சிக்குள், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாகவும் இருவேறு சந்திப்புக்களை நடத்தியதன் பின்னரேயே முடிவினை எடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டது. அத்துடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடனும் பேச்சுக்களை முன்னெடுப்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில் பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாக மீண்டும் கூடிப்பேசுவதென்ற நிலைப்பாட்டுடன் தீர்க்கமான தீர்மானங்களின்றி கூட்டம் நிறைவுக்கு வந்தது.