ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்: பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என சீமான்  வேண்டுகோள்

ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

காலங்காலமாக அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு கடைசி சொட்டு கண்ணீரும் கானல் நீரான இனத்திற்கு, தூரத்தில் தெரியும் ஒரு சிறு வெளிச்சமும் புதிய நம்பிக்கையையும் மகிழ்வினையும் அளிக்கிறது. ஈழ இனப்படுகொலை நடைபெற்ற 15 ஆம் ஆண்டு நினைவுநாட்களை முன்னிட்டு ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினரான வைல்லி நிக்கல் சக 6 உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கை இனக்கொடுமைகளுக்கு சனநாயக வழியில் நிரந்தரத் தீர்வுகாண ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அதிமுக்கிய தீர்மானத்தைப் பேரவையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அத்தீர்மானம் ஈழத் தமிழர்களுடனான இராசதந்திர உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க அரசினை வலியுறுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன் தமிழர்களும் சிங்களவர்களும் இறையாண்மை கொண்ட இரண்டு தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்ததையும் 1833ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களை இணைத்து பிரித்தானிய அரசு ஒற்றை ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த வரலாற்றையும் அத்தீர்மானம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தமிழர்களின் கருத்துக்களைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலின்றிக் கொண்டுவரப்பட்டது என்பதையும் அதனை அன்றைய தமிழர் தலைவர்கள் நிராகரித்ததையும் சுட்டிக்காட்டியுள்ள அத்தீர்மானம் தமிழர்களின் உரிமைபெற்ற நல்வாழ்விற்கு 13வது திருத்தம் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதையும் பதிவு செய்துள்ளது. மேலும் இலங்கை இனவாத அரசு தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதையும் தமிழர்களின் தாயகத்தை தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசமாகவே இன்றளவும் வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காகவே 1976ஆம் ஆண்டு தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அத்தீர்மானம் நினைவு கூர்ந்துள்ளது. அதுமட்டுமின்றிஇ 2006ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்ற அமெரிக்க அரசின் துணைச்செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறைமுகமாக அங்கீகரித்ததை மேற்கோள்காட்டி ஈழ விடுதலைக்கான  பொதுவாக்கெடுப்பை நடத்த அத்தீர்மானம் திடமாக வலியுறுத்துகிறது.

இத்தனை தெளிவுமிக்கத் தீர்மானத்தை கொண்டுவந்த வைல்லி நிக்கல் மற்றும் அவருடைய சக உறுப்பினர்களுக்கு என்னுடைய அன்பையும்இ நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்த அவர் இனவழிப்பு போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் இலங்கை இனவாத அரசிடமிருந்து குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தை கூட பெற்றுத்தர முடியவில்லை என்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு நிகழ்ந்த மிகப்பெரிய தலைகுனிவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.