ஈரான் அதிபரது உலங்கு வானூர்தி மிகப் பழையது! விபத்துக்கு பொறுப்பு அமெரிக்காவா?

பெல்-212 ஹெலி பற்றி ஈரானில் குற்றச்சாட்டு 

Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஈரானிய அதிபர் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்கான உண்மையான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. ஆனால் அவரது மரணத்துக்கு விமான உதிரிப்பாகங்கள் மீதான அமெரிக்காவின் தடையும் பிரதான காரணம் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பவர் ஈரானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் முகமது ஜாவத் ஷெரீப் (Mohammad Javad Zarif).
விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி மிகப் பழையது. உதிரிப்பாகங்கள் கிடைக்காதது. இதில் ஒரு பங்குப் பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கிறது. ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்கா புரிந்துவருகின்ற குற்றங்களின் பட்டியலில் இதுவும் எழுதப்படும் – இவ்வாறு அவர் கூறியிருப்பதாக ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

படம் :விபத்து நடந்த இடத்தில் மீட்கப்பட்ட அதிபரது உடல் எடுத்துவரப்பட்ட காட்சி..

இந்த அனர்த்தத்தின் முக்கிய பொறுப்பாளிகளில் ஒருவர் அமெரிக்கா. விமான உதிரிப்பாகங்கள் மீது விதித்த பொருளாதாரத் தடைகள் ஈரானிய மக்கள் அனுபவிக்க வேண்டிய தரமான – பாதுகாப்பான – விமானப் பயணங்களைத் தடுத்து வருகிறது-என்ற கருத்தை வேறு சில ஆய்வாளர்களும் வெளியிட்டிருக்கின்றனர்.
மோசமான வானிலை மட்டுமல்ல. விமான உதிரிப்பாகங்கள் மீதான நீண்டகாலத் தடையும் இந்த அனர்த்தத்துக்குக் காரணமாக இருக்கலாம். – இவ்வாறு அமெரிக்க ராணுவ ஆய்வாளரும் முன்னாள் கேணலுமாகிய செட்ரிக் லெய்டன் (Cedric Leighton) என்பவரும் கூறுகிறார்.
1960 கள் முதல் பறக்கின்ற பெல் 212 ரக ஹெலிக்கொப்ரர் (Bell 212 helicopter) ஒன்றிலேயே ஈரானிய அதிபரும் அவரது குழுவினரும் பயணம் செய்துள்ளனர். அது வியட்நாமில் அமெரிக்கா பயன்படுத்திய பெல் 212 ருவீன் ஹூய் (Bell 212 Twin Huey) சிவில் உலங்கு வானூர்தி என்பது தற்சமயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவற்றைக் கொள்வனவு செய்து மிக அதிக காலம் தொடர்ச்சியாக அவற்றைச் சேவையில் ஈடுபடுத்தி வந்தது என்று கூறப்படுகிறது. அவற்றின் பராமரிப்புக் குறைபாடுகள் பற்றிய செய்திகளும் வெளியாகியுள்ளன.
மிக முக்கிய பிரமுகராகிய அதிபர் பயணிக்கின்ற விமானத்துக்கே இந்த நிலைமை என்றால் ஈரானின் பாதுகாப்பு நிலைவரம் எதிர்பார்ப்பது போலன்றி மிகவும் பலவீனமான கட்டத்தில் உள்ளதா என்ற கேள்வியைச் சிலர் எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின் முதற்கட்ட இறுதிச் சடங்குகள் இன்று செவ்வாய்க்கிழமை ஈரானின் வடமேற்குப் பிராந்திய நகரான தப்ரிஸில் (Tabriz) பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற்றிருக்கின்றன. அங்கிருந்து அவரது உடல் பின்னர் தெஹரானுக்கு எடுத்துவரப்படவிருந்தது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">