இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை :  சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட்

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமார்ட்  கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் தூவி வணங்கி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அக்னெஸ் கலமார்ட்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதை சர்வதேசத்துக்கு கூறுவதே எங்களின் முதன்மையான நோக்கம். அதற்குரிய விசாரணைகளை நடத்துவதற்கான படிநிலைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினரால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் மக்களின் பேரெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது. இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஒட்டி இலங்கைக்கு வருகை தந்ததை அடுத்து ஏ 9 வீதியில் இருந்த அனைத்து ராணுவ முகாம்களும் அகற்றப்பட்டு உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

 சர்வதேச மன்னிப்பு சபையின் தலைவர் இலங்கைக்கு வருகை தருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக இந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் அவர்களுடைய பிரதான இராணுவ தளங்களுக்கு அனுப்பப்பட்டதோடு இராணுவ முகாம்களாக இருந்த கொட்டகைகளும் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.