இந்தியாவில்  ஐந்தாம் கட்ட தேர்தல் இன்று

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் ஐந்தாம் கட்ட தேர்தல் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இதன்படி, 49 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புகளுடன் இன்று மாலை 06 மணி வரை வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

பீகார், ஜார்க்கண்ட், மராட்டியம், ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஐந்தாம் கட்ட தேர்தல் இடம்பெறுகின்றது. இதுவரை நிறைவடைந்துள்ள 04 கட்ட தேர்தல்களில் 67 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 542 தொகுதிகளில் 379 தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

இதேவேளை, 25 ஆம் திகதியன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளதுடன் ஜூன் மாதம் முதலாம் திகதியன்று 57 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதையடுத்து ஜூன் மாதம் 04 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முதற் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. கடந்த மாதம் 26 ஆம் திகதி 02 ஆம் கட்டமாக கேரளா உட்பட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் தேர்தல் இடம்பெற்றது. இதனையடுத்து கடந்த 07 ஆம் திகதி 03 ஆம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றதுடன் கடந்த 13 ஆம் திகதி 96 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன.