வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

இலங்கைத்தீவின் தலைநகரான கொழும்பு வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெற்றதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் மற்றுமொரு குழு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது.

நிகழ்வு நடைபெற்றபோது பொலிஸாரின் பாதுகாப்புடன் எதிர்ப்பு வெளியிட்ட குழுவினர் கோஷம் எழுப்பினர்.

இதன்போது நிகழ்வினை குழப்ப முயன்ற ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சிங்கள, தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை வெள்ளவத்தை கடற்கரையில் நடாத்தியபோது இந்த எதிர்ப்புகளை சந்தித்தனர்.

ஆனாலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை திட்டமிட்டவாறு ஏற்பாட்டாளர்கள் நடாத்தி முடித்தனர்.

பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். தீபமேற்றி வணக்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது சமயத் தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதும் அச்சமின்றி மக்கள் நிகழ்வில் கலந்துக்கொண்டனர். இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

வெள்ளவத்தையில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.