2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த் தெரிவிப்பு
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி நிச்சயம் நீடிக்கும் என்றும் இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையின்போதே, எதிர்வரும் ஊரக உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் பேசப்பட்டதாக தினமணி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். தேமுதிக, அதிமுக நட்புணர்வு மக்களவைத் தேர்தலில் பிரதிபலித்தது என்றும் இக்கூட்டணி மக்கள் விரும்பக்கூடிய வகையில் உள்ளது என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் கோயில் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். மணிமண்டபம் தொடர்பான கோரிக்கையை மீண்டும் அரசுக்கு வலியுறுத்துகிறோம். கடந்த 4 மாதங்களில் மட்டும் அவரது நினைவிடத்திற்கு 15 லட்சம் பேர் வந்துள்ளனர். இதனைக் கௌரவித்து, ‘லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் விருதும் வழங்கப்பட்டுள்ளதுஇ’ என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் நதிகள் இணைப்பை செயல்படுத்துவதை தேமுதிக முதல் கோரிக்கையாக முன்வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜயகாந்த் மறைவுக்கு தமிழக அரசு செய்த மரியாதையை என்றுமே மறக்கமாட்டோம். எனினும், அரசியல் ரீதியாக திமுக மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1, 000 வழங்கும் திட்டத்தில் தேர்தலுக்குப் பின்னர் மாற்று நிலைப்பாட்டை திமுக அரசு எடுத்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கஞ்சா புழக்கம் மிக அதிகமாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளால் மிகப்பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கனிமவளக் கொள்ளையால் தமிழகம் அழிவுப் பாதைக்கு சென்றுகொண்டிருக்கிறது. மக்களிடம் ‘ஜஸ்ட் பாஸ்’ பெற்றுள்ள திமுக அரசுக்கு நான் 10க்கு 4 மதிப்பெண்கள் மட்டுமே கொடுப்பேன் என்று பிரேமலதா கூறியுள்ளார்.