ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டார்!சுட்டவர் கைது!!
வயிற்றில் படுகாயம்!!! உயிராபத்தான நிலை
Kumarathasan Karthigesu-பாரிஸ்
மத்திய ஐரோப்பிய நாடாகிய ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் ரோபேர்ட் ஃபிகோ (Robert Fico) சுடப்பட்டார். ஹான்ட்லோவா(Handlova) என்ற மத்திய நகரத்தில் கலாசார நிலையம் ஒன்றின் அருகே தனது ஆதரவாளர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்புகையில் அவர் மீது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு சூடுகளில் ஒன்று பிரதமரது வயிற்றுப் பகுதியைத் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் நினைவிழந்தார் என்று உள்நாட்டு செய்தி நிறுவனங்கள் அறிவித்தன.
59 வயதான பிரதமர் ஃபிகோவைச் சுட்டுக் கொல்ல முயன்றவர் எனக் கூறப்படும் 71 வயதான ஆண் ஒருவரைக் காவலர்கள் சம்பவ இடத்தில் மடக்கிப்பிடித்துள்ளனர்.
சுயநினைவிழந்த பிரதமர் கார் ஒன்றில் ஏற்றப்பட்டு அருகே உள்ள நகரத்தின் மருத்துவமனைக்குக் கொண்டு விரையப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்ரர் மூலம் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஐரோப்பாவின் மையத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்று ஸ்லோவேக்கியா. ஐரோப்பிய மண்ணில் பிரதமர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சி ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தைக் கண்டித்து ஐரோப்பிய நாடுகளது தலைவர்கள் பலரும் செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.
சம்பவம் தனக்குப் பெரும் “அதிர்ச்சி” அளிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய மண்ணில் இதுபோன்ற வன்முறை அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன்(Ursula von der Leyen) தனது செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி விடுத்துள்ள செய்தியில் “நமது சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை” என்று கூறியிருப்பதுடன் பிரதமர் ஃபிகோவின் குடும்பத்தினர் மற்றும் ஸ்லோவாக்கியா மக்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் உடற்கட்டு வீரராகிய(bodybuilder) ரோபேர்ட் ஃபிகோ கடந்த ஒக்ரோபரில் தேசியவாதிகளை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி(left-wing Smer-SSD) ஒன்றுக்குத் தலைமை வகித்துத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே ரஷ்ய அதிபர் புடினின் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொண்டவர் ஃபிகோ.
தனது கட்சிக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் உக்ரைனுக்கு ஒரு துப்பாக்கி ரவையைக் கூட வழங்க மாட்டோம் என்று தேர்தல் பரப்புரையின் போது அவர் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.