ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி  உத்தியோகபூர்வ அறிவிப்பு  ஜூன் 18ஆம் திகதி வழங்கப்படும்.

ஊடகங்களின் கவனத்தை சீர்குலைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக பொதுத் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ச இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் நோக்கமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உள்ளிட்ட நால்வர் தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக அமையும் என தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதே அடிக்கடி எழுப்பப்பட்ட கேள்வியாக இருந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்தக் கேள்வியைத் தவிர்க்க முயற்சித்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களின் குறுக்கு கேள்விகளுக்கு பின்னர் இது தொடர்பில் பதிலளிக்க வேண்டியிருந்தது.

இதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கட்சி சரியான வேட்பாளரை முன்வைப்பதாகவும், அவர் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வது உறுதி எனவும் தெரிவித்தார். வேட்பாளர் தொடர்பில் சிறிய ஒரு துப்பை கூட கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவால் மட்டுமே வழங்க முடியும் எனவும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தொழிலதிபர் தம்மிக பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு நாளுக்கு நாள் அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உரிய நேரத்தில் அறியத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்ததாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.