விக்னேஷ் மரணத்தை சீமான் வியாபாரம் ஆக்கி விட்டார்: தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு

காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பக லட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பகலெட்சுமி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், செய்தியாளர்களை சந்தித்தார் . விக்னேஷின் உயிர் தியாகத்தை வைத்து சீமான் பணம் சம்பாதிக்கிறார். விக்னேஷுக்கு நினைவு மண்டபம் கட்ட வெளிநாட்டில் பணம் வாங்கி செலவு செய்து விட்டார். அதில் ஒரு ரூபாயை கூட எங்கள் குடும்பத்தினருக்கு தரவில்லை.

எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவி செய்தது போலவும், எனது கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். கண் அறுவை சிகிச்சைக்கு சீமான் என்னை எந்த மருத்துவமனைக்கும் அழைத்து செல்வில்லை. நாங்கள் அவர்களுடன் செல்லவில்லை. எங்கள் சித்தி தான் கண் அறுவை சிகிச்சைக்கான செலவுகளை பார்த்தார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு நகை கொடுத்தது போல சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால்இ அவர்களால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். விக்னேஷ் மரணத்தை சீமான் வியாபாரம் ஆக்கி விட்டார். இளைஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் சீமான் வியாபாரம் ஆக்கிவிட்டார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார். நாதக தொண்டர் தீக்குளித்து பலியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது இறப்பை வைத்து சீமான் பணம் சம்பாதிப்பதாக, பலியான இளைஞரின் தாயார் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.