நியூ கலிடோனியா தீவில் கட்டுக்கடங்கா வன்செயல்! கடைகள், வாகனங்கள் எரிப்பு!!

இதுவரை மூவர் உயிரிழப்பு! எலிஸேயில் மக்ரோன் கூட்டம் அவசரகாலச் சட்டம் பிரகடனம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய நியூ கலிடோனியாவில் (Nouvelle Calédonie) கடந்த மூன்று நாட்களாகப் பெரும் வன்செயல்கள் வெடித்துள்ளன. தலைநகர் நௌமியாவில் (Nouméa) கடைகள், கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பொலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
பொலீஸ் ஜொந்தாம் வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.
பசுபிக் கடலில் ஆஸ்திரேலியாவுக்கும் ஃபிஜி தீவுக்கும் இடையே அமைவிடத்தைக் கொண்டு 19 ஆம் நூற்றாண்டு முதல் பிரான்ஸின் நிர்வாகப் பிராந்தியமாக விளங்கி வருகின்ற நியூ கலிடோனியாவில் இடம்பெறுகின்ற மிக மோசமான கலவரம் இதுவாகும்.
எதற்காக இந்த வன்செயல்?
நியூ கலிடோனியா தீவுக் கூட்டங்களில் தற்காலிகமாகக் குடியேறியவர்கள் அங்கு நடைபெறுகின்ற மாகாணத் தேர்தல்களில் வாக்களிப்பதை அனுமதிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்தம் பாரிஸில் நிறைவேற்றப்பட்டிருப்பதன் எதிரொலியாகவே அங்கு கலவரங்கள் வெடித்துள்ளன.
நியூ கலிடோனியாவில் பத்து ஆண்டுகளுக்குக் குறையாமல் வசிக்கின்ற பிரெஞ்சுக் குடிமக்கள் அங்கு நடைபெறும் மாகாணத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குகின்ற சட்டத் திருத்தம் பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது ஜனநாயக ரீதியாக நியாயமானது என்று அதனை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் இந்தச் சட்டத் திருத்தம் தீவின் உள்ளூர்வாசிகளைச் சீற்றமடையச் செய்துள்ளது. நியூ கலிடோனியாவின் பழங்குடிகளான கனாக்(Kanak) இன மக்களை ஓரங்கட்டி அவர்களது வாக்களிப்பு வீதத்தைக் குறைத்துவிடும் என்பது சட்டத்தை எதிர்ப்போரது வாதமாக உள்ளது.
சட்டத்தை எதிர்ப்போர் தலைநகர் நௌமியாவில் ஆரம்பித்த கண்டனப் பேரணிகள் பெரும் வன்முறையாக மாறி எல்லா இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் கடந்த செவ்வாயன்று அங்கு இரவு ஊரடங்கை அமுல் செய்ததுடன் பொது இடங்களில் மக்கள் கூடுவதையும் தடை செய்திருந்தனர். அதனை அடுத்து வன்செயல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
கலிடோனியா நிலைவரத்தை ஆராய்வதற்காக அதிபர் மக்ரோன் நெருக்கடிகாலக் கூட்டம் ஒன்றை இன்று புதன்கிழமை எலிஸே மாளிகையில் கூட்டியிருக்கிறார். நிலைவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்த வசதியாக அங்கு அவர் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அத்துடன் கலிடோனியா மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவதற்காக அவர்களை உடனடியாகப் பாரிஸ் அழைத்துள்ளார்.
பிரிவினைக்கு எதிர்ப்பு
கலிடோனிய மக்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரானிஸிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர தனிநாடாக வாழ ஆசைப்படுகிறார்களா என்பதை அறிவதற்காக அங்கு மூன்று முறை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. மூன்று வாக்கெடுப்புகளிலும் அவர்கள் பிரிந்து செல்வதை நிராகரித்திருந்தனர். மூன்றாவது வாக்கெடுப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாப் பெருந் தொற்று நோய்க் காலப்பகுதியில் நடைபெற்றிருந்தது.
தொற்றுநோய்க் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த வாக்கெடுப்பு முழுமை பெறவில்லை என்று பிரிந்து செல்வதை ஆதரிக்கின்ற தரப்பினர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்திருந்தனர்.
கலிடோனியாவின் பிரிவினையை ஆதரிப்போரே தற்சமயம் அங்கு நடைபெறுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்செயல்களின் பின்னணியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">