உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி:  பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முடிவு

உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தமது கட்சியின் கொள்கைகளை தொடரவும், மக்கள் ஆதரவை வலுப்படுத்தவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முடிவெடுத்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் படுதோல்வியை சந்தித்துள்ளதுடன், தொழிற்கட்சி 11 மேயர் பதவிக்கான போட்டியில் 10 இல் வெற்றிபெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பொது தேர்தல் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஆளும் கட்சியின் தோல்வியால் பிரதமர் சுனக் கடும் எதிர்வினைகளை சந்தித்துள்ளார்.

லண்டன் மேயர் பதவிக்கான போட்டியில் தொழிற்கட்சியை சேர்ந்த சாதிக் கான் தொடர்ந்தும் மூன்றாவது முறையாக கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரை இலகுவாக வெற்றிகொண்டுள்ளார். இந்த வெற்றியின் பின்னர் உரையாற்றி சாதிக் கான், பொது தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில்,  கட்சியை வலுப்படுத்தவும், பொது தேர்தல் போட்டிக்கும் ஆளும் கட்சியினர் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் மார்க் ஹார்பர் தெரிவித்துள்ளார்.பிரதமர் சுனக் அதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல்கள் பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கு முந்தைய இறுதிச் சோதனையாகக் கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.