ஜுலை மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பசில் அழுத்தம்

எதிர்வரும் ஜுலை மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவருகிறது.பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற சந்திப்பில் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமென கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் முன்வரிசையில் வர்த்தகர் தம்மிக்க பெரேரா அமரவைக்கப்பட்டதும் பொதுஜன பெரமுனவின் நிபந்தனைகளுக்கு ரணில் இணங்க வேண்டுமென்ற அழுத்தத்தை பிரயோகிக்கவே என அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமரக்கூட வாய்ப்பு கிடைக்காதென பசில் ராஜபக்சவிடம் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாலேயே அவர், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு ரணிலிடம் வலியுறுத்தி வருகிறார்.நாடாளுமன்றத் தேர்தல் முன்னதாக நடைபெற்றால் ஆளுங்கட்சியாக வரமுடியாவிட்டாலும் எதிர்க்கட்சியாகவேனும் வரமுடியுமென பொதுஜன பெரமுன கருதுகிறது.

அதேபோன்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவதானம் செலுத்தி வருகிறார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும். ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தால் அது பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்துக்கும் அச்சுறுத்தலாக மாறிவிடும் என மகிந்த மற்றும் பசில் ஆகிய இருவரும் கருதுகின்றனர். அதன் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைக்க பசில் எடுக்கும் முயற்சி தொடர்பில் மகிந்த ராஜபக்ச எவ்வித எதிர்ப்புகளையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், மே 15 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அரசாங்கம் பாரிய தோல்வியைச் சந்திக்கும். அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் பொதுஜன பெரமுனவின் எம்.பிகள் வீட்டுக்கே செல்ல நேரிடும்.அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த விரும்புகிறார்கள். அது நாட்டுக்கே கேடு. இந்த ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் 50 வீதம் கிடைக்காது. வெற்றிபெறும் வேட்பாளர்கூட 35 முதல் 40 வீதம் வரைதான் வாக்குகளையே பெறுவார்.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தினால்இ எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இதனால் ஸ்திரமற்ற நாடாளுமன்றமே உருவாகும். அதன்மூலம் தமது அரசியல் நோக்கங்களை அடைந்துக்கொள்ள முடியும் என பொதுஜன பெரமுன கருதுகிறது.’ என்றார்.