தேர்தலை நடத்தாமல் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்க வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா: சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்டிருக்கின்றது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி எதிர்வரும் செப்டெம்பர்இ ஒக்டோபர் மாதம் அளவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இலங்கையின் தேர்தல் ஆணையகமும் புதிய தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும்இ அதற்கான திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறி வருகின்றது.
இது இப்படி இருக்க அரசியல்வாதிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. கடந்த காலங்களிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு தள்ளிவைத்திருக்கின்றது எனத் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலில் புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டு வருகின்றோம் என்று காரணம் கூறப்பட்டு காலவரையறையின்றி அந்தத் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
மாகாண சபைகள், உள்ளூாட்சி சபைகள் என்பன அரசின் ஏஜன்டுகள் அல்லது அரசால் நியமிகப்பட்டவர்கள் எனப்படுவோரின் அதிகாரத்தின் கீழ்க் காணப்படுகின்றது. அரசின் இவ்வாறான போக்குகள் மீண்டும் பாரிய எழுச்சியொன்றுக்கு வழிவகுக்கலாம்.
இவ்வாறான எழுச்சிகள் பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் என்பவை பின்தள்ளிப் போவதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தும்.ஜனநாயகத்தை மதித்து மக்களின் வாக்குரிமைகளை மதித்து ஜனாதிபதித் தேர்தல் குறிப்பிடப்படும் திகதியில் குறிப்பிடப்படும் காலத்தில் நடத்தப்பட வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர். தேர்தல்களைக் காலவரையறையின்றி ஒத்திவைப்பதை விடுத்து மக்களை மதித்து தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும் என்றார்.