தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிப்பு :மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பு இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பாதுகாப்பு கட்டுப்பண தொகையை அதிகரிப்பதற்கு அண்மையில் அமைச்சரவையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, ஜனாதிபதி வேட்பாளருக்காக பதிவு செய்யப்பட்ட கட்சி ஒன்றின் கட்டுப்பணம் 50,000 ரூபாவில் இருந்து 26 இலட்சம் ரூபாவாகவும், சுயேச்சை வேட்பாளரின் கட்டுப்பணம் 75,000 ரூபாவில் இருந்து 31 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டது. மேலும், பொதுத் தேர்தல் வேட்பாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு 11, 000 ரூபாவும் சுயேட்சை வேட்பாளருக்கு 16,000 ரூபாவும் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு 6,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளருக்கு 11,000 ரூபாவும் பாதுகாப்பு கட்டுப்பண தொகையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்தது. இந்த நிலையில், கட்டுப்பணத்தை அதிகரிப்பதன் மூலம், பணபலம் படைத்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், சாதாரண குடிமக்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.