சிட்னியில் ஆயர் தாக்கப்பட்ட காட்சி யூரியூப்பில் நேரலை!

பயங்கரவாதத் தொடர்பு தாக்குதலாளியைத் தேடி தேவாலயத்துக்கு வெளியே திரண்டவர்கள் வன்செயல்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
 
சிட்னி நகரின் சுற்றுவட்டாரத்தில் வேக்லி (Wakeley) என்ற இடத்தில் அமைந்துள்ள குட் ஷெப்பேர்ட் தேவாலயத்தில் (The Good Shepherd Church) நேற்று 16 வயது இளைஞன் ஒருவன் ஆயர் உட்பட பலரைத் தாக்கிக் காயப்படுத்திய சம்பவம் தேவாலய யூரியூப் சனலில் நேரலைக் காட்சிகளாக ஒளிபரப்பாகியுள்ளது.
ஆயரின் பிரசங்கம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கறுப்பு உடை அணிந்த இளைஞர் ஒருவர் அவரை நோக்கி முன்னேறிச் சென்று மேடைப்பகுதியில் வைத்து ஆயுதம் ஒன்றினால் தாக்குகின்ற அந்தக் காட்சிகள் உலகெங்கும் செய்தி ஊடகங்களில் இடம்பிடித்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 48 மணிநேர இடைவெளிக்குள் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது என்பதால் அது முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அசிரியன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த (Assyrian Church) ஆயர் மார் மரி எமானுவல் (Mar Mari Emmanuel) என்பவரே தாக்குதலுக்கு இலக்காகக் காயமடைந்தார். மதத் தந்தை ஒருவர் உட்பட வேறு மூன்று பேரும் தாக்கப்பட்டனர். தாக்கிய இளைஞனைக் கையில் காயத்துடன் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

அவர் என்ன நோக்கத்துக்காகத் தேவாலயத்துக்குள் தாக்குதலை மேற்கொண்டார் என்பது உடனே தெரியவரவில்லை. ஆயினும் இது ஒரு மத தீவிரவாதத்தின் அடிப்படையிலான “பயங்கரவாதச் செயல்” என்பதைத் விசாரணையில் தாங்கள் கண்டறிந்துள்ளனர் என்று பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இளைஞனின் மதப் பின்னணி பற்றிய விவரத்தைப் பொலீஸார் வெளியிடவில்லை.
தாக்குதல் நடந்த கையோடு அதனை நேரலையில் கண்டவர்கள் தேவாலயத்துக்குப் படையெடுத்து வந்து தாக்குதலாளியைக் காட்டுமாறு கேட்டு வன்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு மேலதிக பொலீஸார் வரவழைக்கப்பட்டனர். கற்களை எறிந்தும் வாகனங்களைத் தாக்கியும் வன்செயல்களில் ஈடுபட்டவர்களை அடக்கப் பொலீஸார் கண்ணீர்ப் புகை பயன்படுத்த நேரிட்டது என்று செய்திகள் வெளியாகின.

ஆத்திரம் மேலிட அங்கு திரண்டவர்கள் தேவாலயத்தைச் சூழ வசிக்கின்ற அசிரியன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் ஆயரது பிரசங்கங்களால் கவரப்பட்டு அவர் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இருந்து வெளியேறிவந்தவர்கள் என்றும் செய்தி ஏஜென்சி ஒன்று தெரிவித்தது.

ஆயர் மார் மரி எமானுவல் அண்மைய ஆண்டுகளில் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். கொரோனா பெருந் தொற்று நோய்க் காலத்தில் சிட்னியில் கோவிட் முடக்கங்களையும் சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து எதிர்த்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">