வெடிப்பினால் ஏற்பட்ட தீவிபத்தில் மூவர் உயிரிழப்பு!
ஏழாம் மாடியிலிருந்து குதித்த ஒருவரும் பலி
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் 11ஆவது நிர்வாகப் பிரிவில் மாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்றில் நேற்றிரவு எட்டு மணியளவில் நேர்ந்த தீ விபத்தில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளனர்.
“146 rue de Charonne” என்ற முகவரியில் அமைந்துள்ள எட்டு மாடிகள் கொண்ட கட்டடத்தின் ஏழாவது மாடியிலேயே பெரும் வெடிப்புச் சத்தத்தை அடுத்துத் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
ஆண் ஒருவர் வெடியோசையை அடுத்து ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அவசர மருத்துவசேவையினர் வந்து அவரை மீட்டபோது அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என்று கூறப்படுகிறது. ஏனைய இருவரது உடல்கள் சேதமடைந்த வீட்டின் உள்ளே இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல வண்டி வாகனங்களுடன் விரைந்து வந்து தீ ஏனைய பகுதிகளுக்குப் பரவாது தடுத்து விட்டனர்.
எரிவாயு விநியோகம் இல்லாத அந்தக் கட்டடத்தில் வெடிப்பு எதனால் நேர்ந்தது என்பது தங்களுக்குக் குழப்பமாக உள்ளது என்று குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இது எரிவாயுச் சிலிண்டர் சம்மந்தப்பட்ட விபத்தாக இருக்கலாம் என்பதைப் பொலீஸார் மறுக்கவில்லை. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.