வேறு நபர்களை வைத்து என்னை மலினப்படுத்தத் தமிழரசுக் கட்சிக்குள் சிலர் சூழ்ச்சி – சிறீதரன்
“வேறு நபர்களை வைத்து என்னை மலினப்படுத்துகின்ற விடயங்களை எங்களுடைய கட்சியைச் சார்ந்த சிலர் மிகவும் நூதனமாகக் கைக்கொள்கின்றார்கள்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் சீற்றத்துடன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு விவகாரம் கைமீறிப்போயுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயம்.
இன்னும் எத்தனை பேர் இடையீட்டு மனுக்களைச் செருகுவார்கள், வழக்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என்று கூற முடியாதுள்ளது. இதைவிடுத்து பல புதிய புதிய வழக்குகளும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலரை நீதிமன்றத்துக்கு அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் கட்சிக்கு ஆரோக்கியமான நல்ல சூழலை உருவாக்குமா என்று எமக்குத் தென்படவில்லை. ஆகவே, கட்சியின் நிலைமையில் மிகவும் மனக்கவலையுடன் இருக்கின்றோம்.
எங்களுடைய கட்சியைக் கொண்டு செல்வதில் – கட்சியை நிமிர்த்திச் செல்வதில் சுயநலத்தோடு சேர்ந்த சூழ்ச்சிகரமான சில நபர்களுடைய செயற்பாடுகள் நேரடியாக என்னைத் தாக்காவிட்டாலும் மறைமுகமாகத் தாக்குகின்றன. வேறு நபர்களை வைத்து சிறீதரனை மலினப்படுத்துகின்ற விடயங்களை எங்களுடைய கட்சியைச் சார்ந்த சிலர் மிகவும் நூதனமாகக் கைக்கொள்கின்றார்கள் என்பதை நான் நேற்றுமுன்தினம் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து அவதானிக்க முடிந்தது.” – என்றார்.