பிரபாகரன் குறித்து இந்தியாவிற்கு இப்போதும் சந்தேகம் உள்ளது-மாவை சேனாதிராஜா.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியாவிற்கு இப்போதும் சந்தேகம் உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த சாந்தனுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சாந்தன் சுமார் 32 ஆண்டுகள் இந்தியச் சிறையில் அடைப்பட்டு இருந்தார். தன் தாய் மண்ணையும், பெற்றத் தாயையும் அவர் பார்த்துவிட வேண்டும் என அவர் மிகவும் ஆசைப்பட்டார்.

தன் தாய் மண்ணில் கால் வைக்கவேண்டும் என சாந்தன் எண்ணியிருந்தார். எனினும், இன்று அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்த கூடியிருக்கின்றோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் ஊடகங்கள் மூலம் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன.

சாந்தன் உள்ளிட்ட விடுதலைப் போராளிகள் மறையவில்லை. அவர்கள் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் இன விடுதலைக்காக பல லட்சம் பேரின் உயிரை இழந்துள்ளோம். எனினும், இன்னும் அந்த இலட்சியம் நிறைவேறவில்லை.

இந்த நிலை இப்படியே தொடரக்கூடாது. நாங்கள் ஒன்றுபட்ட தேசத்தவர்களாக விடுதலைக் கிடைக்கும் வரைக்கும் போராட” வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.