கட்சி பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு எதிர்வரும் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயார் – மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு எதிர்வரும் தேர்தலுக்கு முகம்கொடுக்க கூட்டணி அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்போம். எவ்வாறான சவால்களை ஏற்படுத்தினாலும் அதனை முறியடித்துக்கொண்டு முன்னுக்கு செல்லும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடுவளையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியின் மாவட்ட சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாற்றில் பல தடவைகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. அப்போது எமக்கு ஏற்பட்ட சவால்களை முறியடித்துக்கொண்டு கட்சியை முன்னுக்கு கொண்டு செல்ல நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதேபோன்று தற்போதும் கட்சிக்கு எதிராக பல்வேறு சவால்கள், எதிரான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சவால்களை வெற்றிகொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
குறிப்பாக கட்சியின் செயலாளர் என்னை அடிப்படையாகக்கொண்டு வழக்கு தொடுத்திருக்கிறார்.. அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நீதிமன்றம் சென்று என்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார். எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருக்கிறது.
இந்த சவால்கள் அனைத்துக்கும் நாங்கள முகம்கொடுப்போம். எமது நியாயத்தன்மையை நீதிமன்றில் சமர்ப்பிப்போம். நீதிமன்றம் பக்கச் சார்பற்ற தீர்ப்பொன்றை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். அதன் பிரகாரம் இந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு, எம்முடன் கூட்டணி அமைக்க ஒன்றுபட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாங்கள் எதிர்வரும் தேர்தலில் பலம்மிக்க கட்சியாக முன்வருவோம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு பூராகவும் விழுந்து விழுந்து மீள எழும்பிய கட்சியாகும். அதனால் யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு எவவாறான நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் தொடர்ந்தும் முன்னுக்கு செல்வோம் என்றார்.