ஈரானியத் தூதரகம் தகர்ப்பு! புரட்சிக் காவல்படையின் சிரேஷ்ட தளபதிகள் உயிரிழப்பு!!

தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் !! பதிலடி நிச்சயம் அதனால் பதற்றம்!!!

Kumarathasan Karthigesu-பாரிஸ்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அமைந்திருந்த ஈரானிய நாட்டின் தூதரகக் கட்டடம் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை வீச்சில் தகர்ந்துள்ளது. அங்கு தங்கியிருந்த ஈரானின் புரட்சிக் காவல் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது ரேசா ஷகீதி (Mohammad Reza Zahedi) மற்றும் துணைத் தளபதி ஜெனரல் முகமது ஹாதி ஹாஜி ரஹிமி (General Mohammad Hadi Haji Rahimi) உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
தங்களது வீரர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என்பதை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவல் படை (Islamic Revolutionary Guards Corps) பின்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியாவின் அரச செய்தி நிறுவனமும் ஈரானிய அரசும் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளன.டாமாஸ்கஸின் தெற்குப் பகுதியில் தூதரகம் அமைந்திருந்த பல மாடிக்கட்டடம் இடிந்து வீழ்ந்து அதிலிருந்து புகை மண்டலம் கிளம்புகின்ற காட்சிகள்
வெளியாகியிருக்கின்றன.
இஸ்ரேலியப் போர் விமானம் ஒன்று ஏப்ரல் முதல் நாளாகிய இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் ஐந்து மணியளவில் ஈரானியத் தூதரகம் அமைந்திருந்த கட்டடம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது என்று சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகிய இத்தகவலுக்குத் தாங்கள் பதிலளிக்க முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

படம் :கொல்லப்பட்ட புரட்சிக் காவல்படைத் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது ரேசா ஷகீதி.

ஈரானுடன் தொடர்புடைய பல இலக்குகள் மீது இஸ்ரேல் இதுபோன்ற பல தாக்குதல்களை அண்மைய ஆண்டுகளாக நடத்தி வருவதைச் சுட்டிக் காட்டுகின்ற அவதானிகள், மத்திய கிழக்கில் தற்சமயம் நடைபெறுகின்ற போர், காஸாவுக்குள் மாத்திரம் உள்ளடங்கியது அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இஸ்ரேலியர்கள் ஈரானின் நிலைப்பாட்டையும் அதன் கூட்டாளியாகிய ஹிஸ்புல்லா இயக்கத்தையும் சீண்டிப் பார்த்துச் சோதிக்கின்றனர். இஸ்ரேலியர்கள் தங்கள் எதிராளிகள் மீதான அழுத்தத்தை அதிகரித்துவருவதற்கு இந்தச் சம்பவம் ஒரு சமிக்ஞை ஆகும்.-என்று மத்திய கிழக்குப் போர் நிலைவரத்தைக் கண்காணித்து வருகின்ற அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிராகப் பதில் நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை ஈரானுக்கு உள்ளது என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்திருக்கிறார்.
“இஸ்ரேலின் துன்புறுத்தலுக்கு எதிரான பதில் மற்றும் தண்டனை எந்த வகையானது என்பதைத் தெஹ்ரான் முடிவு செய்யும்”-என்று அவர் மேலும் கூறியிருக்கிறார். இதனால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் வலுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையே மூண்ட போர் மெல்ல மெல்லப் பிராந்தியப் போராக மாறிவருகிறது. யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சிகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்கப, போரை விரிவுபடுத்தும் விதமான இது போன்ற தாக்குதல்களும் தொடர்கின்றன.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">