சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: டிடிவி தினகரனிடம் சீமான் கேள்வி
சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா என்றார். சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது, சசிகலா வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?. சசிகலா குடும்பம், கட்சி, ஆட்சி இருக்கக்கூடாதுஇ அதை தவிர வேறொருவர் கையில் கொடுக்கும் திட்டத்தை வகுத்தது யார் என சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான், இதற்கு மனசாட்சியுடன் மக்கள் முன்பு டிடிவி தினகரன் பதில் சொல்ல வேண்டும் என கூறினார்.
டிடிவி தினகரன், சசிகலா பிரச்சினையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான். இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார். இரட்டை இலையை பறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்தது பிரதமர் மோடி தான். என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை என சீமான் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சீமான், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று விவசாயி சின்னத்தை முடக்கி விட்டார்கள்.
தற்போது அமமுகவுக்கு குக்கர் சின்னம் எப்படி வந்தது. இவ்வளவு நிகழ்ந்தும் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் எனவும் விமர்சத்தார். இதனிடையே, தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயாலளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.