கார்த்திகைப் பூ சர்ச்சை: இலங்கை ஆசிரியர் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் தீபன் திலீசன் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் அலங்கரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக – குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் பொலிசாரினதும் இராணுவத்தினரதும், அரச புலனாய்வாளர்களினதும் அச்சுறுத்தல் இடம்பெற்றுவருவது தனிமனித சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரங்களை நசுக்கும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்.
இலங்கை அரசின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் – கலை ரீதியாகவும் – குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் – சமூகம் சார் பிரக்ஞைகளை வெளிப்படுத்தும் போது, அதனை அரச இயந்திரங்களால் நசுக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதற்கு அனுமதிக்க முடியாது.இதற்கு கல்வி திணைக்களங்களும் துணைபோகுமானால், கல்விக்குள் இராணுவ மற்றும் பொலிஸ் தலையீடுகளை ஆதரிக்கும் செயற்பாடுகளாகவே இவை அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின், இல்ல அலங்காரங்களில் மாணவர்கள் வெளிப்படுத்திய வெளிப்பாடுகள், இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான சிந்தனை மற்றும் மனச்சாட்சி சுதந்திரத்துக்கு உட்பட்டதாகும்.
இந்த விடயங்களில் பொலிசாரோடு இணைந்து வடமாகாண கல்வி அமைச்சும் தலையீடு செய்வதென்பது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடு எனபதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடாகும்.
இவ்விடயம் தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொருத்தமான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்ல மெய்வன்மை போட்டியில் கார்த்திகை பூ, யுத்த டாங்கி வடிவில் இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டமை தொடர்பில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.