எட்டுமாதங்கள் நீடித்த மர்மங்களுக்குப் பின் குழந்தை எமிலின் உடல் எச்சங்கள் மீட்பு!
வழிப்போக்கர் ஒருவராலே மண்டை ஓடு கண்டுபிடிப்பு -ஈஸ்டர் திருநாள் வேளை முழுக் கிராமமும் துயரில்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸில் புலன் விசாரணையாளர்களுக்கு ஒரு சிறு தடயத்தைக் கூட விட்டுவைக்காதவாறு- பெரும் மர்மமான பின்னணியில்- காணாமற்போயிருந்த இரண்டரை வயது ஆண் குழந்தையின் உடல் எச்சங்கள் சுமார் எட்டரை மாதகாலத்துக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
எமில் சோலா என்ற அந்தக் குழந்தையினுடையது என்று கூறப்படும் மண்டை ஓடு அவன் காணாமற்போன அதே கிராமத்தின் ஒரு பகுதியில் நேற்று சனிக்கிழமை பகல் வழிப் போக்கர் ஒருவரது கண்ணில் சிக்கியுள்ளது என்று அறிவிக்கப்படுகிறது. ஆரம்ப கட்ட மரபணுச் சோதனை அந்த மண்டை ஓடு குழந்தையினுடையது தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
எச்சங்கள் தென்பட்ட இடம் உறைபனி மூடிய பிரதேசம் என்று கூறப்படுகிறது. பெரும் எண்ணிக்கையான தடயவியல் மற்றும் மீட்புப் படைப் பிரிவினர் அந்த இடத்துக்கு விரைந்து அகழ்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். பிரதேசம் முழுவதும் ஆட்கள் உட்செல்ல முடியாதவாறு மூடப்பட்டிருக்கிறது.
குழந்தை உயிருடன் வருவான் என்ற நம்பிக்கையுடன் ஓரிரு வாரங்கள் அல்ல சுமார் ஒன்பது மாத காலமாகக்காத்திருந்த அவனது பெற்றோர்கள் அதிர்ந்துபோயுள்ளனர். பிரெஞ்சு அல்ஸ்ப் பகுதியில் தீவிர கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முழுக் கிராமமும் ஈஸ்டர் திருநாள் சமயத்தில் இந்தச் செய்திகேட்டு அதிர்ச்சியிலும் துயரிலும் மூழ்கியுள்ளது என்று அங்கிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலையில் கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகப் பெற்றோருடன் தனது பேரன் பேர்த்தியிடம் வந்திருந்த இரண்டரை வயது ஆண் குழந்தையான எமில் (Émile) திடீரெனக் காணாமல் மறைந்த சம்பவம் வேர்னே என்ற அந்தக் கிராமத்தை மட்டுமன்றி முழு நாட்டையுமே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியிருந்தது.
பேரனாரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தவன் பெரியோரது கவனத்தில் இருந்து தப்பித் தவறி எங்கே மறைந்தான் என்பது எந்தவித தடயங்களோ தகவல்களோ ஏதும் இன்றிப் பெரும் புதிராக – மர்மமாக- நீடித்து வந்தது . பொலீஸ் மற்றும் ஜொந்தாம் படையினர் அந்த மலைக்கிராமம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடியும் எமிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வீடுகளில் உள்ள அலுமரிகள், குளிர்சாதனப் பெட்டிகள் முதல்கொண்டு காடுகளில் உள்ள பற்றைகள், குழிகள் வரை குடைந்து தேடியும் குழந்தையைப் பற்றிய எந்த தடயத்தையும் கண்டறிய முடியாமற் போனமை மீட்பு நிபுணர்களை வியப்புக்குள்ளாக்கி இருந்தது. அதிவிசேட மோப்ப சக்தி மிகுந்த செய்ன் ஹூபேர்(Saint-Hubert) நாய்களும் ஒரு கட்டத்தில் தேடுதலில் களமிறக்கப்பட்டிருந்தன. பிரதேசத்தில் எங்கும் குழந்தையின் வாடையை மோப்பம் பிடிக்க அவைகளால் முடியாமற்போனமை மேலும் பெரும் புதிராக இருந்தது.