இலங்கை ஜனாதிபதி தேர்தல் : தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த தகவல்.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜூலை மாதம் இறுதிவரை இடம்பெறும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடத்தப்பட வேண்டும் எனவும், அது செப்டெம்பர் மாத இறுதியில் அல்லது ஒக்டோபர் மாத தொடக்கத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறும், அவ்வாறு நடத்தினால் ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.