அழுகின்றது அல்ப்ஸ் கிராமம்! எமிலின் எலும்புகள் மர்மம் துலக்குமா?
அவனுக்கான பேஸ்புக்கில் அஞ்சலிச் செய்திகள் குவிவு .மண்டை ஓட்டைக் கைகளில் தூக்கி வந்தார் பெண்...! பொலீஸார் ஆச்சரியம்!!!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
சுமார் இருபத்தைந்து குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்ற அந்தச் சின்னஞ்சிறிய அல்ப்ஸ் மலைக் கிராமத்தின் கதை மீண்டும் முழு நாட்டு மக்களினதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. செய்தியாளர்களும் படப்பிடிப்பாளர்களும் அங்கு படையெடுத்துச் சென்று முகாமிட்டிருக்கின்றனர்.
ஆண் குழந்தை எமில் காணாமற்போய் ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில் அவனது உடல் எச்சங்கள் இந்தக் கிராமத்தின் ஒதுக்குப் புறம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.
காணாமற்போனவர்களைத் தேடிக்கண்டுபிடிக்கின்ற பொலீஸ் புலனாய்வு வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி நடத்தப்பட்ட மிக நீண்ட ஒன்பது மாத காலத் தேடுதல்களும் புலன் விசாரணைகளும் படுதோல்வி கண்ட நிலையிலேயே குழந்தை எமிலியின் மண்டை ஓடு மற்றும் பற்கள் என்பவற்றை மலையேறும் வழிப்போக்கரான பெண் ஒருவர் தற்செயலாகக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமளிக்கும் திருப்பம் . இது பற்றிய செய்தி ஏற்கனவே வாசகர்கள் அறிந்ததே.
இதில் இன்னொரு முக்கிய தகவல். மண்டை ஓட்டையும் பல்லையும் கண்ட பெண் அதுபற்றிப் பொலீஸாருக்குத் தகவல் வழங்காமல் அவற்றைக் கையால் தொட்டு எடுத்துக் கொண்டு நேரடியாகப் பொலீஸ் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். ஆச்சரியமளிக்கும் வழமைக்கு மாறான இந்தச் செயலை உள்ளூர் செய்தி ஊடகங்கள் முக்கியத்துவப்படுத்தி உள்ளன. அந்தப் பெண் அதே கிராமத்தில் வசிப்பவர்.
உடல் எச்சங்கள் மீட்கப்பட்ட இடம் குழந்தை காணாமற்போன வீட்டில் இருந்து – காகம் பறக்கும் குறுக்குத் தூரத்தில் கணிப்பிட்டால் – ஒரு கிலோமீற்றர்கள் தான். ஒரு இரண்டரை வயதுக் குழந்தை வீட்டில் இருந்து அந்தளவு தூரம் தனியே நடந்து வந்திருக்க முடியாது என்பது ஜொந்தாம் நிபுணர்களது முதல் கணிப்பு. அவனை எவராவது அந்த இடத்துக்குத் தூக்கி வந்திருக்க வேண்டும் என்ற கருதுகோளுக்கு இது இடமளிக்கிறது. ஆனால் கடைசியாகக் குழந்தையைக் கண்ட இரு முக்கிய சாட்சிகள் அவன் வீதியில் தனித்து நடமாடும் காட்சியையே நினைவுகூர்ந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
⚫என்ன நடந்திருக்கலாம்?
குழந்தை தனியே நடந்துவந்து தவறிப் பள்ளத்தில் வீழ்ந்து காயமடைந்து உயிரிழந்திருக்கலாம். அல்லது காட்டு விலங்குகளால் இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்.
அப்படியானால் – ஜொந்தாம் படைகளது ஒன்பதுமாதகால தேடுதல்களின் போது அந்த இடமும் பல தடவைகள் நுணுக்கமான முறையில் சல்லடை போடப்பட்டிருக்கிறது. விசேட மோப்ப நாய்களும் அங்கு தேடியுள்ளன. அப்போது எலும்போ வேறு எந்தச் சிறு தடயமுமோ சிக்காதது எப்படி?
காலநிலை மாறுதல்களால் எச்சங்கள் வேறெங்காவதிருந்து பனிமழையால் அங்கே அடித்துவரப்பட்டனவா? அல்லது – சமீபத்தில் உடல் எச்சங்களை யாராவது எடுத்து வந்து அங்கே வீசியுள்ளனரா என்பன போன்ற வலுவான கேள்விகள் இதனால் எழுகின்றன.
⚫எலும்புகள் மரணத் திகதியைக் காட்டுமா?
எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மேலும் தடயங்களைத் தேடி அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. மண்கூறுப் பகுப்பாய்வு வல்லுநர்களாகிய உடற்கூற்று நிபுணர்கள்( anthropologists-specialists in soil analysis) அங்கே சென்றிருக்கின்றனர். எதற்காக? ஒரு பொருள், அல்லது உடல் எவ்வளவு காலம் மண்ணில் புதையுண்டு கிடந்திருக்கலாம் என்பதைத் தரையின் கூறுகள் மூலம் கணிப்பிட்டு அறிய முடியும். எமிலின் எச்சங்கள் அந்த இடத்தில் எவ்வளவு காலம் இருந்திருக்கலாம் என்பதை உறுதி செய்வதன் மூலம் அவை மனிதர்களால் அல்லது விலங்குகளால் அங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாமா என்ற ஐயங்களுக்கு விடைகிடைக்கலாம் என்று ஜொந்தாம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மண்டை ஓட்டின் உட்பகுதிக்குள் ஒட்டி இருக்கக் கூடிய மண் துகள்கள் அதே தரையின் மண் கூறுகளோடு பொருந்துகின்றனவா என்பதை அறிவதன் மூலம் எச்சங்கள் எங்கிருந்து வந்தன என்பது பற்றிய சந்தேகங்களுக்குத் தெளிவு கிடைக்கலாம். எலும்புகள் மூலம் மரணத் திகதியை அறிய முடியும் என்றும் என்று சட்ட மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை எட்டாம் திகதி குழந்தை எமில் அவனது தாய்வழி போரனார் வீட்டில் இருந்து காணாமற் போன சமயத்தில் தீவிர கத்தோலிக்கர்களாகிய அவனது தாயும் தந்தையும் அங்கு இருக்கவில்லை.
90 சென்ரிமீற்றர் உயரமான குழந்தை காணாமற்போன சமயத்தில் கடைசியாக மஞ்சள் நிற ரீ-சேர்ட்டும் வெள்ளைக் காற்சட்டையும் கால் உறைகளும் அணிந்து காணப்பட்டான் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எலும்பு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அவனது ஆடைகளின் எச்சங்கள் எவையேனும் மீட்கப்பட்டால், அவன் அந்த இடத்துக்கு வந்திருப்பதை அல்லது கடத்தி வரப்பட்டதை உறுதி செய்வதற்கு அது ஆதாரமாகலாம் என்றும் நம்பப்படுகிறது.
குழந்தையின் மரணம் கொலையா? ஒரு விபத்தா? என்பதை அறிவதற்குத் தடய விசாரணைகள் உதவலாம். எனினும் அதற்குக் காலம் எடுக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொலையானால் அது யாரால் நிகழ்ந்தது என்ற கேள்விக்கு விடை கிடைப்பதற்கான எந்தச் சிறு துப்பையும் இன்னமும் விசாரணையாளர்கள் கண்டுபிடிக்கவில்லை.
சில ஊடகங்கள் குழந்தையின் பேரனாரது கடந்த கால நடத்தைகள் மீது கவனத்தைத் திருப்பி இருந்தன. 1990 களில் அங்குள்ள தனியார் கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றில் அவர் சம்பந்தப்பட்ட வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் எழுந்திருந்தன என்று கூறப்படுகிறது.
பிரெஞ்சு அல்ஸ்பில்- தரையில் இருந்து ஆயிரத்து 200 மீற்றர் உயரத்தில் – அமைந்துள்ள மேல் வேர்னே (Haut-Vernet) குக்கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமான 25 குடும்பங்கள் வசிக்கின்ற அந்தக் கிராமத்தின் வாழ்வு நகரங்களைப் போன்றதல்ல. ஒரு குடும்பத்தின் துயரில் ஏனையோர் ஒட்டுமொத்தமாய்த் துவண்டு விடக் கூடிய உணர்வுப் பிணைப்புக் கொண்ட கிராமம் அது.
“அவன் உயிருடன் இருந்தால் அவனை எங்களிடம் தாருங்கள். இறந்திருந்தால் அடக்கம் செய்வதற்காக உடலையாவது தாருங்கள்…”
எமிலியின் மூன்றாவது பிறந்த நாளை ஒட்டி அவனது தாயார் கத்தோலிக்க வார இதழ் ஒன்றில் வெளியிட்ட செய்தியில் மேற்கணடவாறு மன்றாடியிருந்தார்.
எமிலி காணாமற்போன பிறகு அவனுக்காககப் பிரார்த்தனை செய்யவும் தகவல்களைப் பகிரவும் எனத் தொடங்கப்பட்ட பேஸ் புக் பக்கத்தில் நேற்று முதல் அஞ்சலிச் செய்திகள் குவியத் தொடங்கியுள்ளன.