மகிந்த ராஜபக்ச வீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் மோதல்

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போது மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர் எரந்த கினிக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.ரணிலின் பிள்ளைகள் போல் செயற்படுவதாக காஞ்சனவை நகைச்சுவையாக எரந்த கினிகே சாடிய நிலையில் கோபமடைந்த அமைச்சர் அவரை தாக்க முயன்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஒன்றுகூடலின் போது அமைச்சர்களான காஞ்சன விஜேசசேகர,  பிரசன்ன ரணதுங்க, பிரமித்த பண்டார தென்னக்கோன், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுஜன பெரமுன கட்சிக்குள் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் வகிக்கும் பலர் ரணிலுக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும் பொதுஜன பெரமுன தனியான ஒரு அதிபர் வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருகின்றார்.இதற்கான முயற்சியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஈடுபட்ட நிலையில் அது தோல்வியில் முடிவடைந்துள்ளதோடு ரணிலின் கடும் அழுத்தம் காரணமாக அதிபர் தேர்தல் தொடர்பில் பசிலில் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.