நுவரெலியாவில் வருடாந்த போனஸ் கேட்டு மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்.
டி,சந்ரு , நானுஓயா நிருபர் செ.திவாகரன்
நுவரெலியியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவாஎலிய பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் போனஸை கேட்டு கடந்த புதன்கிழமை (27) தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை (29) வரை தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன அத்துடன் வேலை நிறுத்தமும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 900க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் .வருடாந்தம் தங்களுக்கு வழங்கப்படும் போனஸ் பணத்தினை வழங்கவேண்டும் என வலியுறுத்தியே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
முதல் நாள் தொழிற்சாலைக்கு உள் நுழைவாயில் மூடப்பட்டு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இரண்டாவது நாள் முதல் பிரதான வீதியோரம் அமர்ந்து எதிர்ப்பு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆடைத் தொழிற்சாலையில் வருடக்கணக்கில் போனஸ் வழங்கப்பட்டது. கொவிட் – 19 தொற்று நோய் நிலவிய காலப் பகுதியில் மாத்திரம் வழங்கப்படவில்லை எனவும் , இவ்வருடம் ஆரம்பத்தில் தொழில் செய்யும் போது அனைவருக்கும் முழுமையான போனஸ் வழங்குவதாக தெரிவித்ததாகவும் ஆனால் இப்போது போனஸ்சும் இல்லை இறுதியில் தொழில் செய்ததற்கான சம்பளமும் இல்லை என தெரிவித்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.
தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையோற்றத்திற்கு மத்தியில் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவதற்கு, ஆடைத்தொழிற்சாலையில் வழங்கப்படும் சம்பளம் போதுமானது அல்ல. எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தங்களுக்கு உரிய போனஸை வழங்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் இன்றைய தினம் தொழிற்சாலையின் ஊடாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச போக்குவரத்து வசதிகள் ரத்து செய்யப்பட்டு , தொழிற்சாலையினை மூடிவிட்டு முகாமைத்துவத்தில் உயர் பதவி வகிக்கும் அனைவரும் தொழிற்சாலை விட்டு வெளியேறி உள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, ஆடை கைத்தொழில்சாலைக்கு கிடைத்துள்ள ஓடர்கள் குறைவாகும். ஆகையால், வருடாந்தம் வழங்கப்படும் போனஸ் தொகையை இம்முறை வழங்கமுடியாது. எனினும், தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் 100% தில் 50% வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆடைத்தொழிற்சாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.