ஜேர்மனியில் Flix பஸ் விபத்தில் ஐவர் உயிரிழப்பு!

ஈஸ்டர் விடுமுறைக்கு சுவிஸ் சென்றவர்கள் இருபது பேர் காயம்!!

Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஜேர்மனியின் கிழக்கில் Leipzig என்ற இடத்தில் ஃபிலிக்ஸ் (Flix) நிறுவனத்துக்குச் சொந்தமான பபயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழந்தனர். இருபது பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பேர்ளின் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இன்று புதன்கிழமை காலை எட்டு மணியளவில் 52 பயணிகள் மற்றம் இரண்டு சாரதிகளுடன் பயணத்தைத் தொடங்கிய அந்த பஸ் சுமார் 190 கிலோமீற்றர்கள் தூரம் வரை சென்ற நிலையில் திடீரென விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஏ9 வீதியில் மியூனிச் திசைப் பக்கமாகச் சென்றுகொண்டிருந்த பஸ், Wiedemar மற்றும் SchkeuditzerKreuz  நகரசபைப் பகுதிகளுக்கு இடையே திடீரென வீதியை விட்டு விலகி அருகே நின்றிருந்த மரங்களுடன் மோதித் தலைகீழாகப் புரண்டது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

பொலீஸாரும் மீட்புப் படையினரும் உடனடியாக அங்கு விரைந்தனர். ஏ9 வீதியின் இரு புறமும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டுக் ஹெலிக்கொப்ரர்கள் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்த பயணிகள் ஐவரதும் விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. அவர்களில் ஒருவரது உடல் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸின் அடியில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் சாரதிகள் இருவரும் தப்பிவிட்டனர் என்று ஃபிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்குக் காரணம் என்ன என்பது பற்றி உடனடியாகத் தெரியவில்லை என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதே வீதியில் 2019 இல் ஃபிலிக்ஸ் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத் தக்கது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">