நுவரெலியா வைத்தியசாலையில் அடையாளம் காணாத முதியவர் சடலம்.

செ.திவாகரன் டி.சந்ரு

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் முதியவரின் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் அறிவித்துள்ளது.

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா சுரங்கப்பாதைக்கு அருகில் கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் குறித்த சடலத்தினை மீட்டு அதே புகையிரதத்தில் எடுத்துச் செல்லப்பட்டு தலவாக்கலை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாருக்கு தெரிவிக்கப்படதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த அடையாளம் காணாத முதியவரின் சடலத்தினை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த முதியவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் உயிரிழந்தவர் 55 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 1 அங்குல உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்த ஆண் பச்சை நிற சட்டையும் கருப்பு நிற நீண்ட காற்சட்டையும் அணிந்துள்ளதாகவும் அதில் 4000/= ரூபாய் பணமும் இருந்ததாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இனங்காணப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை இனங்காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களை வேண்டிக் கொண்டுள்ளது.