இலங்கை விமானப்படையில் சேர்வதற்கு சுமார் 250க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் விண்ணப்பம்

இலங்கை விமானப்படையில் சேர்வதற்கு சுமார் 250க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எயர் டட்டூ 2024’ கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியின் போதே இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கை விமானப்படை கடந்த மார்ச் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ‘எயர் டட்டூ 2024’ கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்தியது. இந்தக் கண்காட்சியானது ஒரு திருப்புமுனையாக விடயமாக அமைந்தது மாத்திரமன்றி, இது விமானப்படைக்கும் யாழ்ப்பாண சமூகத்திற்கும் இடையிலான உறவுகளில் ஒரு சாத்தியமான போக்கையும் உருவாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்டுகின்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க, யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இந்த திட்டத்தை கருத்தில் கொண்டு விமானப்படை ஆட்சேர்ப்பு நிகழ்ச்சியை நடத்தியதாகவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 250 இளைஞர்கள் விமானப்படையில் சேர விண்ணப்பித்ததாகவும் கூறினார்.வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதுடன், உற்பத்தி கைத்தொழில்களை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.நாட்டில் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு கடுமையாக உழைத்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.