ஹரக் கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவிய பொலிஸ் சார்ஜன்ட் கைது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தக தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவியமை தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி தரவுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​ஹரக் கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசம் என்பன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தலைக்கவசத்தை கொண்டு வருவதில் சுத்தா என்ற நபர் ஈடுபட்டுள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பான விசாரணையில், அவர் வசிக்கும் இடத்தைவிட்டு வௌியேறியுள்ளமை தெரியவந்தது.

சுத்தா என்ற நபர் தொடர்பில் மேலும் தொலைபேசி மூலம் ஆராயப்பட்டதுடன், அவர், மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டுடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து ‘ஹரக் கட்டா’ தப்பிச் செல்லும் முயற்சிக்கு  வெளிநாட்டில் இருந்து வழிநடத்திய மிதிகம ருவான் என்ற ஜெயசேகர விதானகே ருவன் சாமரவுடன் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அதன்படி, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (06) பிற்பகல் மிதிகம பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர் அஹங்கம திக்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.